திருச்சி கோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நாகராஜனை சிலர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது . அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. எனவே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையம் சென்று நாகராஜனை காணவில்லை என புகார் மனு கொடுக்க உறவினர்கள் சென்றனர். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாகராஜனை என்கவுன்டர் செய்ய போலீசார் தான் அழைத்து சென்றுஉள்ளனர். அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாகராஜனின் மனைவி பிரேமா மற்றும் உறவினர் என 100 பேர் திருச்சி கலெக்டர் பங்களா முன் திரண்டு சாலை மறியல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கூடுதல் எஸ்.பி. கோடிலிங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில் நாகராஜன் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக அவரை கைது செய்த ஜீயபுரம் போலீசார், நாகராஜனை குற்றவியல் நீதிமன்றம் எண் மூன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.