கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 18 நாள் சித்திரை திருவிழா வருகின்ற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
இதனைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 3-ம் தேதி தர்மர் பிறப்பு, 7-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட மகாபாரத சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மே 13-ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று வெளி நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி சித்திரை தேரோட்டமும், 15-ம் தேதி விடையாத்தியும், 16-ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள், பூசாரிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.