5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வை அரியலூர் மாவட்டம் குருவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவி துவக்கி வைத்தார்.
இதில் கூடோ இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆப் இந்தியாவின் மும்பை தலைமை நிலைய பயிற்சியாளர்கள்
ஜாஸ்மின்மக்வானா, மேகுதேகியா பிரியன்ராணா, கலந்து கொண்டு கருப்பு பட்டை தேர்வு மற்றும் தேசிய அளவிலும் நடுவராக பணியாற்றுவதற்கான பயிற்சி, தேசிய அளவில் பயிற்சி வழங்குவதற்கான திறன் வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியினை அளித்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் விரைவில் நடைபெற உள்ள CBSE, SGFI, Khelo இந்தியா ஆகிய போட்டிகளில் பங்கு பெறுவதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் திருச்சி, தஞ்சை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த 250வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணியின் வீரர் – வீராங்கனைகளுக்கு டாக்டர் கலைஞர் சாம்பியன் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கூடோ சங்கத்தின் மாநில செயலாளர் சேக்அப்துல்லா, பிராங்கிளின்பென்னி உட்பட பலர் கலந்து கொண்டனர்.