கோவை ஃபுட்டீஸ் சார்பாக நடைபெற்ற சமையல் போட்டியில் கொங்கு நாட்டின் பாரம்பரிய சைவ,அசைவ, உணவுகளை ஆர்வமுடன் சமைத்த பெண்கள்.கோவையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஃபுட்டீஸ் (Kovai Foodies) எனும் முக நூல் குழு சார்பாக ஆரோக்கியம் மற்றும் உணவு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சமையல் போட்டிகளை நடத்தி வருபவர் லலிதா கவுதம்.இந்நிலையில் கோவை விழா நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கொங்கு குஷைன்ஸ் எனும் தலைப்பில் கொங்கு நாட்டு உணவு சமையல் போட்டி கோவை ஃபுட்டீஸ் சார்பாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கேட்டரிங் துறை இணைந்து நடத்திய இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சமையல் போட்டியில் சைவ,அசைவ உணவுகளை பெண்கள் போட்டி போட்டு சமைத்தனர். குறிப்பாக அசைவ உணவகளில் கொங்கு நாட்டு பாரம்பரிய மட்டன் சுக்கா,பெப்பர் சிக்கன்,கோலா உருண்டை மாப்பிள்ளை விருந்து என நண்டு,மட்டன், கோழி வறுவல் என கொங்கு நாட்டு பாரம்பரிய உணவுகளும்,
சைவ உணவில் ராகி புட்டு,வாழைப்பூ வடை,பருப்பு சாதம்,தட்டபயிறு துவையல்,
முருங்கை சாதம் என பல்வேறு சைவ உணவுகளும் சமைக்கப்பட்டன.
இந்த போட்டியில், கல்லுாரி மாணவர்கள் துவங்கி, இல்லத்தரசிகள்,, முக்கியப் பொறுப்புகளில் உள்ள பெண்கள் என பல தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் சமைக்கும் திறனை வெளிப்படுத்தினர். இந்த போட்டியின் நடுவர்களாக எஸ்.என்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் கல்லனரி மற்றும் பேஸ்ட்ரீஸ் துறை பேராசிரியர் அஜீத் குமார்,ஆர்.எச்.ஆர். 1931 ஓட்டல் நிர்வாக இயக்குனர் ஹேமா லட்சுமி,ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த உணவுகளை தயார் செய்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை ஃபுட்டீஸ் குழு நிர்வாகிகள் ஆஷா கிருஷ்ணகுமார், விஜய் கிருஷ்ணன்,
கல்லூரி கேட்டரிங் துறை தலைவர் ஸ்ரீ ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.