அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. அதனடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து நீர்வளத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேவையான இடங்களில் மணல் மற்றும் சவுக்கு மரங்களை தயார் நிலையில் வைத்திடவும், வருவாய்த் துறையினர் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் தீயணைப்புத்துறை, காவல் துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவிக்கையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஒரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகளவு இருக்கும்;. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் ‘செல்பி” (selfie) எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில்; அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள்; பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு, விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.