மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஜி.ஆர். கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஆசியாவிலேயே இது தான் முதல் தனியார் மருத்துவ கல்லூரி.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.
இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்கச் சென்றார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய்(33) என்பவரை கைது செய்தனர்.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீஸார் விசாரணையை நாளைக்குள் முடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். ஏற்கெனவே, முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் மருத்துவர்கள் அதேநேரம், கொல்கத்தா காவல்துறை கொலை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் (நாளைக்குள்) முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளனர். மருத்துவர்களோடு பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் ஆளும் திரிணமூல் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக ஜூனியர் மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். இந்த நால்வரை தான் தற்போது போலீஸார் விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர்.
அந்த நான்கு மருத்துவர்களும் சென்றபிறகு பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் என்பவர், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மருத்துவக் கல்லூரி தலைமைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் உட்பட அனைவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.