சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார்,சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜோதிமணி (40) என்பவர் சொத்துப் பிரச்னை காரணமாக தனது கணவர் சந்திரசேகர் என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 5-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருணுக்கு மூன்று ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரை சிறை தண்டனை விதித்து, மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தார்.
மேலும், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரவி, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரிதத நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பளித்தனர். அதில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு கோர்ட் அளித்த திர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்புபடி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும், 5 பேர் விடுதலையில் தலையிடவேண்டிய அவசியல்லை என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.