அரியலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து துவக்கி வைத்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கூறியதாவது…. நமது தாயகத்தைக் காக்கும் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடிநாள் நிதி வசூல் துவக்கப்படுகிறது. எனவே நமது படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை போற்றிடும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடிநாள் வசூலில் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமணநிதியுதவி உள்ளிட்டதிட்டத்தின் கீழ் 29 நபருக்கு ரூ.5,61,000/-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
2021-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ரூ.32,75,000/- ஆகும். ஆனால் நமது மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.40,75,000/- நிதி வசூலித்து 124% சதவீதத்துடன் சாதனை எட்டியுள்ளது.
நடப்பாண்டின்; 2022க்கான அரசின் இலக்கு ரூ.34,60,000/. இவ்வருடமும் கடந்த ஆண்டு போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை காட்டிலும் கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ம.கலையரசிகாந்திமதி, நல அமைப்பாளர் முன்னாள் படைவீரர் நலன்சி.சடையன் மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.