சென்னையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஹீரோ ஏசியன் சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படும் கோப்பை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அங்கு உள்ள வீரர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பாஸ் த பால் டிராபி டூர் என்ற அடிப்படையில் மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்ட அந்த கோப்பையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, எம் எல் ஏ முத்துராஜ் ஆகியோர் வீரர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தினர்.
பின்னர் ஹாக்கி போட்டி நடைபெற உள்ள விளையாட்டு மைதானத்தில் 17 கோடி மதிப்பில் கார்பன் டர்ப் அமைக்கப்பட்டிருப்பதை புதுக்கோட்டையில் உள்ள வீரர்களுக்கு காண்பிக்க அந்த கார்பன் டர்ப் காண்பிக்கப்பட்டு பின்னர் அந்த டர்பில் அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் ஹாக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
மேலும் இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஹாக்கி பேட்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஹாக்கி பேட் மரத்தினால் செய்வதால் அதற்காக பல மரங்கள் வெட்டப்பட்டு வரக்கூடிய நிலையில் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கோடு இதில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
ஆன்லைன் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை வழக்கறிஞர்கள் எடுத்து கூறுவார்கள்.சிறையில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டும் தான் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் வழங்கப்படுகிறது, கூடுதலாக வேறு யாருக்கும் எந்த சலுகைகளும் சிறைத்துறை சார்பில் வழங்கப்படவில்லை, வழங்கவும் முடியாது, அதனால் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு என்ன சலுகைகள் வழங்கப்படுகிறது அதுதான் வழங்கப்படுகிறது. அமைச்சர் என்ற முறையில் திமுகவைச் சார்ந்தவர் என்ற முறையில் கூடுதலாக எந்த ஒரு சலுகையும் அவருக்கு வழங்கப்படவில்லை, செந்தில் பாலாஜியின் வழக்கு உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்களில் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் இது போல் தவறான செய்திகளை பரப்புவதன் மூலமாக செந்தில் பாலாஜி ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க சிலர் பார்க்கிறார்கள். ஆனால் சிறைத் துறையில் அவருக்கு கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை வழங்கவும் மாட்டோம் .முதலமைச்சரும் அதற்கு அனுமதிக்க மாட்டார்.
மேகதாது விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்பார்.
நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நேரில் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு மனுவை அவரிடம் வழங்கப்பட்டது. அதற்கு எந்த புகைப்படத்தையும் எடுக்க சொல்லவில்லை இருக்கும் படங்கள் அப்படியே இருக்கட்டும் என்று உத்தரவாதத்தை கொடுத்து அது தமிழ்நாடு முதலமைச்சர் இடமும் வழக்கறிஞர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று கூறினார்.
லஞ்ச வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இரண்டாம் நபர்களிடம் ஒப்படைக்க முடியாது. கொடநாடு வழக்குக்காக போராட்டம் நடத்துபவர்கள் போராட்டம் நடத்தட்டும் ஆனால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மறு விசாரணைக்காக கேட்டுள்ளோம், யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.