16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா உள்பட 11 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாகவும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சீனியர் வீரர்கள் இஷாந்த் ஷர்மா, ரஹானே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் தொடக்க விலை ரூ.50 லட்சமாகும். எப்போதுமே வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். எனவே பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் போன்ற வீரர்களை வாங்க பல அணிகள் முயற்சிக்கும் என்பதால், அவர்களுடைய ஏலத்தொகை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தான் ஏல கையிருப்பு தொகை அதிகமாக இருக்கிறது. ரூ.42¼ கோடி வைத்து இருக்கும் அந்த அணி 13 வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.20.45 கோடி உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.