கப்பலோட்டிய தமிழன், சுதந்திர போராட்ட வீரர், வ உ சிதம்பரனாரின் 153 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் ,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள வ உ சிதம்பரனாரின் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகர மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் பலரும் கலந்து கொண்டு வஉசிக்கு மரியாதை செலுத்தினா்.
அப்போது அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
லால்குடி தொகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் நான் பேசியபோது 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து போட்டுவிட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி .தலைவர் எங்கள் கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்
ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஆகிய பின்பு சட்டமன்றத்தில் பெருமையாக பேசினார்கள்.
கலைஞருக்கு பின் தளபதி ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியதே தவிர, கூட்டணியை யாரும் விட்டுக் கொடுத்து போக வேண்டியது இல்லை.எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி.
கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக்கொண்டு உள்ளனர்.வேண்டும் என்றே நான் பேசியதை மாற்றி போட்டுவிட்டனர் .
இவ்வாறு அமைச்சர் கே. என். நேரு கூறினார்.