அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். மாமன்னர் ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திய பெருமைக்குரியவர். மாமன்னர் ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன் பல்வேறு நாடுகளை வென்று மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்தவர்.
தஞ்சையில் மாமன்னர் இராஜராஜ சோழனுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சதயவிழா கொண்டாடுவதைப் போல மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கும் அரசு விழா கொண்டாட வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவான ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவித்தார். அந்த வகையில் சென்ற ஆண்டு ஆடி திருவாதிரை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகின்ற 12.8.2023 அன்று கொண்டாடப்படவுள்ளது. ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்ஜாஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆடி திருவாதிரை விழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆடிதிருவாதிரை விழாவின்போது பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும், பொதுமக்கள் சுலபமாக விழாவிற்கு வந்து செல்லும் வகையில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு பேருந்து வசதி, கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டிய விரிவான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.