தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது.
இந்த வௌியீட்டு விழாவில் ‘கொன்றால் பாவம்’ படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது…”‘கொன்றால் பாவம்’ உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. ‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு ஒரு
மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார். படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர். இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குநர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்”.
கதையின் நாயகன் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, ” சில படங்களில் நடித்தால் மட்டுமே நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது போல இந்த படத்தின் கதை என்ன என்று தெரிந்த பிறகும் கூட அதிலிருந்து வெளியே வர எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதுவே இந்த படத்தின் வெற்றி என்று சொல்வேன். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படத்தில் நடித்த உணர்வு இருக்கிறது இந்த படம் மக்களிடத்தில் போய் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்”.