புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது பெண் குழந்தையும், மாதவன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளது.
இந்நிலையில் திலோத்தமாவிற்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிடாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த திலோத்தம்மா இரண்டு குழந்தைகளுடன் அங்கே தங்கி உள்ளார். திலோத்தம்மாவின் தாயார் மகளை கணவர் வீட்டிற்கு போகச் சொன்னதால் அங்கிருந்து வெளியேறியவர் திருச்சியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி தனது 10 மாத ஆண் குழந்தையை திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்ததோடு கடந்த 7 ம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை தர்ஷிகாவை அந்த கிராமத்தில் உள்ள கோயில் கிணற்றில் வீசி அவர் கொலை செய்துள்ளார்.”
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது கணவர் முனியன் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் திலோத்தமை மண்டையூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஒரு குழந்தையை கொலை செய்ததையும் மற்றொரு குழந்தையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், திருச்சியில் விற்கப்பட்ட 10 மாத பச்சிளம் குழந்தையையும் மீட்டு காரைக்குடியில் உள்ள காப்பகத்தில் அனுமதித்தனர்.”
மேலும் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காகவும் விற்பனை செய்த குற்றத்திற்காகவும் தாய் திலோத்தம்மா மீது இரு வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மண்டையூர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.”