திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள சில அந்தநல்லூர், மணிகண்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் உள்ள சில பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டை, அல்லித்துறை ஆகிய பகுதிகளையும், அந்த நல்லூர் ஒன்றியத்தில் சில பகுதிகளையும் இணைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அந்த பகுதி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது. வரி உயர்வு ஏற்படும் எனவ தங்கள் பகுதி எப்போதும் போல ஊராட்சி ஒன்றியத்திலேயே இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சோமரசம்பேட்டை, அல்லித்துறை பகுதி பொதுமக்கள் பெண்கள் உள்பட சுமார் 1000 பேர் இன்று பேரணியாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இவர்கள் திரண்டு வந்திருப்பதை பார்த்த போலீசார் அவர்களை அனைவரையும் மெயின் கேட்டிலேயே தடுத்து நிறுத்தினர். கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கேட்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 3பெண்கள் கடும் வெயிலின் காரணமாக மயக்கம் அடைந்தனர்.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கும் பொதுமக்கள் சமாதானமடையவில்லை.
அதைத்தொடர்ந்து, அதவத்தூர் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளிக்க காவல்துறையினர் அழைத்து சென்றனர். அவர்கள் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். பொதுமக்கள் 1000 பேர் திரண்டு வந்ததால் திருச்சி கலெக்டர் ஆபீஸ் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.