சென்னை, அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் மூட நம்பிக்கை பேச்சுகளை பேசிய விவகாரம் தொடர்பாக திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவை சென்னை சைதாப்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் மாணவர்களிடையே மூட நம்பிக்கை பிரசாரம் செய்து அவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்வதாக கூறி கண்டித்தும், மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும், பெண்களை போகப் பொருளாக சித்தரித்து யூடியூப்பில் தொடர்ந்து பேசி வருவதை கண்டித்தும், அறக்கட்டளையின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை ஆய்வு செய்ய கோரியும் திருப்பூர் குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் அறிவித்தனர்.
இதன்படி இன்று (செவ்வாய்) காலை மகாவிஷ்ணுவின் பரம்பொருள்அறக்கட்டளைஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. நவீன மனிதர்கள் அமைப்பு தலைவர் பாரதி சுப்ராயன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் சன் முத்துக்குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் ரங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் ஈஸ்வரன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.