இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். எனினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே கேரள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், ” தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரள ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்த படத்தை தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு ஆதரவளிக்கிறது” என்றார்.