திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். இவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு செல்ல தீர்மானித்தார். அதன்படி திருவனந்தபுரம் திருமலையில் உள்ள கோவிலில் மாலை அணிந்து கடந்த மாதம் விரதத்தை தொடங்கினார். பின்னர் தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 41 நாள் விரதத்தை முடித்ததும் பாதிரியார் மனோஜ் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார். இதற்காக திருவனந்தபுரம் திருமலையில் உள்ள மகாதேவர் கோவிலில் இருமுடி கட்டினார். அவருடன் மேலும் 5 பேரும் இருமுடி கட்டி அங்கிருந்து புறப்பட்டனர். சபரிமலைக்கு செல்லும் வழியில் சிவகிரி, பந்தளம், எருமேலியில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் 18-ம் படி ஏறி வழியாக சன்னிதானத்துக்கு சென்று பயபக்தியுடன் மனம் உருக வேண்டி அய்யப்பனை தரிசனம் செய்தார். அங்கு பாதிரியார் மனோஜுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலை கோவில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்தனர். இந்து மதம் குறித்து ஆழமாக தெரிந்து கொள்வது மட்டும் தான் எனது நோக்கம், மதம் மாறும் எண்ணம் இல்லை. இந்து மதம் மட்டுமல்லாமல் பிற மதங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சபரிமலை பயணம் மனதுக்கு மிகவும் இனிமை தந்தது. அங்கிருந்து வரமுடியாத அளவுக்கு பூரிப்பை தந்தது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஆலயங்களில் திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த அவருக்கு தடை விதித்துள்ளது. இது தவிர அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.