கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி, 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி டி.கே.மாதவன் போராட்டத்தை தொடங்கினார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். எனவே தலைவர்கள் இல்லாமல் போராட்டம் தத்தளித்தது. கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். அங்கு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு பெரியார் அழைத்துச் சென்று, வைக்கம் வீரர் என்ற பட்டப் பெயரையும் பெற்றார். தற்போது இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளஅரசு சார்பில் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன்படி இந்த நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கேரளா சென்றார். கொச்சி விமான நிலையத்தில் கேரள மாநில தொழில்துறை மந்திரி பி.ராஜீவி, கொச்சி மாவட்ட கலெக்டர் என்.எஸ்.கே. உமேஷ் ஆகியோர் வரவேற்றனர். வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளிக்காவலாவில் உள்ள சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனும் மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து வைக்கம் போராட்டத்தின் போது நூற்றாண்டு துவக்க விழாவில் மலையாளத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… உடல்வேறு என்றாலும் எனக்கும் ,பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்று. சட்டமன்றம் நடைபெற்று வந்தாலும், இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென்றே ஆர்வத்தில் வந்துள்ளேன். இந்தியாவுக்கே வழி காட்டியது, வைக்கம் போரட்டம் தான். வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க பெரியாருக்கு அழைப்பு விடுத்த கேரள தலைவர்கள். தன்னுடன் நட்பு கொண்டிருந்த மன்னருக்கு எதிராகவே போராடினார் பெரியார் என்று இவ்வாறு தெரிவித்தார்.