கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்தது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன்(முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன்) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்தநிலையில் திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக சுவரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோஸ் வல்லூர், முன்னாள் எம்.பி.பிரதாபன் ஆகியோர் செய்த சதியால் கே.முரளிதரன் வீழ்த்தப்பட்டார். ஆகவே, தோல்விக்கு பொறுப்பேற்று 2 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த கட்சி நிர்வாகிகள் சுவரொட்டிகளை கிழித்தனர்.
இதுகுறித்து கே.முரளிதரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. கட்சி தலைமை நிர்பந்தத்தால; தான் இங்கு போட்டியிட்டேன். வடகரா தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி. ஆகியிருப்பேன். கட்சிக்காக எனது கடமையை செய்ய முயன்ற போது, என்னை போட்டியிட கட்டாயப்படுத்தி பலிகடா ஆக்கி விட்டார்கள். அத்துடன் சுரேஷ் கோபியை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை திருச்சூருக்கு வந்து பிரசாரம் செய்தார்.
என்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனில் குமாரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.ஆனால், எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய எந்த காங்கிரஸ் தலைவர்களும் வரவில்லை. இனி நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.