கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.
பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. பல வீடுகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வானிலை முன்னேற்றம் இருந்தால் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் ராணுவம் சார்பில் வயநாட்டை எளிதில் அடைய தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன்,“நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்றார். நிலச்சரிவு ஏற்பட்ட காபி தோட்டங்களில் மேற்குவங்கம், அசாமைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் பணி புரிந்துவந்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கேரள அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் இன்னும் 213 பேைர காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், வயநாட்டில் நடைபெறும் மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கார் மலப்புரம் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக உள்ளூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும் ( புதன்) கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்தும் 2 கலெக்டர்கள் தலைமையில் மீட்பு படையினர் கேரளா சென்று உள்ளனர். ராகுல் காந்தி இன்று வயநாடு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நிலைமை இன்னும் சீராகவில்லை என்பதால் அவர் வருகை தள்ளிவைக்கப்பட்டது. பிரதமர் மோடியும் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசும் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளது.