கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே அங்கு வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். இந்த மோசமான சம்பவத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவுக்குள் மேலும் 100 பேர் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 700 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மாலா நகரில் இருந்த பாலம் இடிந்துள்ளது. முண்டக்கை பகுதியில் உள்ள நிலச்சரிவு ஏற்பட்ட அட்டமலைக்கு செல்லும் ஒரே பாதையாக இந்த பாலம் இருந்தது.
இப்போது நிலச்சரிவு காரணமாக இந்த பாலம் மொத்தமாக இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி மீட்புப் படையினரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாலம் இடிந்துள்ளதால் தற்போது ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முண்டக்கை என்ற இடத்தில் மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் அங்கு இறங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் ஓடுவதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை.
கேரள நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கேரள முதல்வருடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.அத்துடன் இறந்தவர்கள் குடும்பத்துக்க இரங்கலும் தெரிவி்த்து உள்ளனர்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே பேரிடர் மீட்பு படையினர் கேரளா சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னம் 200 பேர் கொண்ட மீட்பு படையினர் கேரளா விரைகிறார்கள்.
வயநாடு முன்னாள் எம்.பியான ராகுல் காந்தி இந்த பிரச்னை குறித்து மக்களவையில் பேசினார். அப்போது வயநாட்டில் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து கேரள முதல்வருடன் பேசினேன. அங்கு போக்குவரத்து, தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. அவற்றை உடனடியாக சீர் செய்து அந்த மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். உடனடியாக தான் அங்கு செல்ல இருப்பதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், கேரளா நிலச்சரிவு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். அங்கு ராணுவமும் களம் இறக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு முகாம்களில் 250 மருத்துவ பணியாளார்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.