கேரளாவில் கடந்த மாதம் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. அப்போது உயிருக்கு பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைதான ஷாருக் செய்பிக்கு சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ.வும் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களை மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ஷாருக் செய்பி கைது செய்யப்பட்டது, அவரை போலீசார் கேரளாவுக்கு கொண்டு வருவது குறித்த விவரங்கள் உடனுக்குடன் பத்திரிக்கைகளிலும் மீடியாக்களிலும் வெளியானது. ரத்தினகிரியில் இருந்து ஷாருக் செய்பியை கேரளாவுக்கு கொண்டு வரும் போது 2 போலீஸ் வாகனத்தில் 2 முறை பழுது ஏற்பட்டது. இதுதொடர்பான படங்களும், வீடியோக்கள் உடனடியாக வெளியானது. ரகசிய விவரங்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்த கேரள டி.ஜி.பி. அனில்காந்த் உத்தர விட்டார். இதில் கேரள தீவிரவாத தடுப்புப் படை ஐ.ஜி.யாக இருந்த விஜயன்தான் முக்கிய தகவல்கள் வெளியாக காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஐ.ஜி. விஜயன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளை ஐ.ஜி. விஜயன் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு வந்ததாக தெரிகிறது. வெளியாட்களுக்கு இந்த விசாரணை விபரங்களை தெரிக்கவே ஐஜி விஜயன் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் டி.ஜி.பி. அனில்காந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.ஜி. விஜயனை டி.ஜி.பி. அனில்காந்த் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கேரளாவில் ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.