சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கேரளா அரசு தரப்பிலும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘‘கடந்த சில மாதங்களாக கேரளா சட்டபேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்க மறுத்து
வருகிறார். மேலும் இரண்டு மசோதாக்களை அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். குறிப்பாக கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட எட்டு முக்கிய மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் உள்ளது.
அதில் முக்கியமாக கேரளாவில் ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் நியமனம் செய்யும் மசோதா, பல்கலைக்கழங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கும் இரண்டு மசோதாக்கள், துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களில் அரசாங்க பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா, பல்கலைக்கழக மேல்முறையீட்டு தீர்ப்பாய மசோதா, லோக் ஆயுக்தா திருத்த மசோதா மற்றும் கேரளா மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா ஆகிய அனைத்தும் தற்போது வரையில் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருந்து வருகிறது.இந்த மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.