ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமாவின் அறிக்கை கேரள திரையுலகில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பெண் கலைஞர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாக அண்மையில் வெளியானஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் வெளியிடப்பட்ட அறிக்கை கேரள திரையுலகை புரட்டிபோட்டுள்ளது. மலையாள பட இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, சித்திக் என பல பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. நடிகர் சங்க பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட பலர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். அறிக்கையும், அதையொட்டி கிளம்பிய ஆவேசமும் அளித்த தைரியம் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் முன்வந்து புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு திரையுலகிலும், வெளியிலும் ஆதரவுக்குரல்கள் அதிகரித்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளான மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நடிகர் முகேஷ், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியே கூறும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது.
இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் அளிக்குமாறு கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. பாதியை மறைத்து மீதியை மட்டும் வெளியிட்டதற்கும் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் ஹேமா அறிக்கையில் மறைக்கப்பட்ட மற்ற விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த உத்தரவால் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது.