Skip to content
Home » தொடரும் பாலியல் புகார்கள்.. கேரள திரை பிரபலங்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு ..

தொடரும் பாலியல் புகார்கள்.. கேரள திரை பிரபலங்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு ..

  • by Authour

நடிகைகளின் அடுத்தடுத்த பலாத்கார புகார்களால் நாளுக்கு நாள் மலையாள சினிமாத்துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறியும், நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறியும் முன்னணி நடிகர்கள் உள்பட 7 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு நடிகை புகார் கூறியிருந்தார். அதன் பேரில் நடிகர் ஜெயசூர்யா, நடிகரும் மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், நடிகர்கள் இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு, தயாரிப்பு நிர்வாகி நோபிள், காஸ்டிங் டைரக்டர் விச்சு, வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகிய 7 பேர் மீதும் பலாத்காரம் உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் முகேஷ் மீது இபிகோ 376 (1), 354, 452, 509 ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் பேரில் மரடு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த நடிகையிடம் ஆலுவாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை டிஐஜி அஜிதா பேகம், எஸ்பி பூங்குழலி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் முகேஷ் தமிழில் ஜாதி மல்லி, மனைவி ஒரு மாணிக்கம், ஐந்தாம் படை ஆகிய படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னை கட்டிப் பிடித்ததாக நடிகை கொடுத்த புகாரின் பேரில் நடிகர் ஜெயசூர்யா மீது இபிகோ 354, 354 ஏ, 509 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகர்கள் சங்கத்தில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்தவர் நடிகர் இடைவேளை பாபு. நடிகர் சங்கத்தில் சேர வாய்ப்பு தருவதாக கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்து மானபங்கம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் பேரில், அந்த நடிகையிடமும் நேற்று சிறப்புப் படை போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பேரில் நடிகர் இடைவேளை பாபு மீது இபிகோ 376, 364 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் வடக்கு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மலையாள சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான மணியன்பிள்ளை ராஜு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாளப் படங்களை தயாரித்தும் உள்ளார். இந்தநிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரில், அவரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் நடிகர் மணியன்பிள்ளை ராஜு மீது போர்ட் கொச்சி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர். மோகன்லால், மீனா, பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த வருடம் ப்ரோ டாடி என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் உதவி டைரக்டராக இருந்த மன்சூர் ரஷீத் தன்னை பலாத்காரம் செய்ததாக ஐதராபாத்தை சேர்ந்த ஜூனியர் நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *