தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெற 9 மாதங்கள் நிறைவு பெற வேண்டும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எடை பொதுவாக 2.26 கிலோவில் இருந்து 5 கிலோ வரை இருக்கும். 9 மாதங்களுக்கு குறைவான காலத்தில் குழந்தை பிறந்தால் குறைமாத பிரசவமாக கருதப்படும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவே இருக்கும்.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும். அந்த குழந்தைகளின் எடை அதிகரிக்கவும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து தொடர்ந்து 100 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக டாக்டர் ரோஜோ ஜாய் கூறுகையில், எந்தவொரு பிறந்த குழந்தைக்கும், உயிர்வாழ்வதற்கு பொதுவாக தாயின் வயிற்றில் குறைந்தது 24 வாரங்கள் வளர்ச்சி தேவைப்படுகிறது. இருப்பினும், ‘நோவாவின் விஷயத்தில், குழந்தை உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே, 23 வாரங்களில் பிறந்தது.
அடுத்த சிக்கல் என்னவென்றால், நோவாவின் தாய்க்கு பிரசவத்தின்போது தொற்று இருந்தது, இது குழந்தைக்கு பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது. கூடுதலாக, குழந்தையின் பிறப்புஎடை வெறும் 350 கிராம் என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே சிகிச்சையை தொடங்கினோம். குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடையாததால், பிறந்தவுடன் குழந்தைக்கு உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் பராமரிக்கப்பட்டது. உடல் எடையை அதிகரிக்கும் சிகிச்சையும் வழங்கப்பட்டது. நோவா இப்போது முழுமையாக ஆரோக்கியமாக உள்ளான். சுயமாக சுவாசிக்கிறான். எனவே தாயுடன் சாதாரண வார்டுக்கு அவன் மாற்றப்பட்டுள்ளான். குழந்தை நோவாவுக்கு எடை அதிகரித்துள்ளது. தற்போது அவனின் எடை 1.850 கிலோ என்ற அளவுக்கு வந்து விட்டது. விரைவில் தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே 350 கிராமில் குழந்தை பிறந்துள்ளது.
எனவே 350 கிராம் எடையுடன் பிறந்த நோவா, தெற்கு ஆசியா நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளான். இதற்கு முன்பு ஐதராபாத்தில் பிறந்த குழந்தை 375 கிராம் எடையுடன் இருந்தது. அதேபோல் இதே எர்ணாகுளத்தில் பிறந்த மற்றொரு குழந்தை 380 கிராம் எடையுடன் இருந்தது. டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் அந்த குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.