கேரள மாநிலம் கொச்சியில் களமச்சேரியில் கடந்த 29ம் தேதி கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தது. இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி வெடிக்கச்செய்யப்பட்டது. இதில் 3 பெண்கள் பலியானார்கள். 50பேர் ரத்தகாயம், தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் நான்தான் என கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மார்ட்டின் ரிமோட் செயலி முறையில் எல்இடி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது உறுதியானது. சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டொமினிக், கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பை தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன். இந்த குண்டுவெடிப்பில் நான் மட்டுமே செய்தேன், வேறு யாரும் உதவவில்லை.
வெடிகுண்டு தயாரிக்க வெடிப்பொருள்களை கொச்சியிலிருந்து வாங்கினேன் என கூறியிருந்தார். கைது செய்யப்பட்ட மார்ட்டினிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அவர் தனது பூர்வீக வீட்டில் வைத்து வெடிகுண்டை தயாரித்ததாக தெரிவித்திருந்தார். அதன்படி ஆலுவா பகுதியில் அத்தாணியில் உள்ள மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெடிக்கச்செய்யப்பட்ட 3 வெடிகுண்டுகளும் சக்தி குறைந்த குண்டுகள் தான். ஆனால் அந்த குண்டுகள் கைதேர்ந்த ஒருவரால் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.
எனவே மார்ட்டின் மட்டுமே இந்த வெடிகுண்டுகளை தயாரித்திருக்க வாய்ப்பில்லை. இதில் மற்றவர்களின் உதவி, ஆலோசனைகள் இருந்திருக்க வேண்டும். அல்லது மார்ட்டின் இதற்கு முன் இதுபோல பலமுறை வெடிகுண்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் கடந்த ஒரு மாதமாக மார்ட்டின் எங்கெங்கு போனார், யார், யாரை சந்தித்தார். போனில் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என தீவிரமாக விசாரிக்கிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.