கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
நேற்று (ஞாயிறு) காலையில் இந்த மாநாட்டின் பிரார்த்தனையின் முக்கிய கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இதில் சமார் 2500 பேர் பங்கேற்றிருந்தனர்.
காலை 9.30 மணிக்குத் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் தொடங்கின.. சுமார் 2500 பேர் குழுமியிருந்த மண்டபத்தின் மையப் பகுதியில் 9.40 மணிக்கு முதல் வெடி குண்டு வெடித்தது. அப்போது அனைவரும் அரங்கில் நின்று கொண்டிருந்தனர். சத்தத்தை கேட்டதும் அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த அலறல் சத்தம் ஓய்வதற்குள் அடுத்தடுத்து மண்டபத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் குண்டுகள் வெடித்தது. தீப்பிழம்பும், புகை மூட்டமும் ஏற்பட்டது. குண்டு வெடிப்புகளில் பலரது உடல்களில் தீப்பிடித்து எரிந்தது. அவர்கள் தீப்பந்தமாய் ஒடினர். நொடிப்பொழுதில் மண்டபம் ரத்தக்களறியாய் காட்சியளித்தது.
. சிறிது நேரத்தில் புகை அடங்கியது. அப்போது ஒரு பெண் இறந்து கிடந்தார். அவரது பெயர் லிபினா. சுமார் 40 பேர் ரத்தகாயங்களுடன் கிடந்தனர். அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்டகு குமாரி(53) என்பவர் இறந்தார். அதைத்தொடர்ந்து 12 வயது சிறமி ஒருவரும் பலியாகி உள்ளார். ஆஸ்பத்திரிசியில் சிகிச்சையில் உள்ளவர்களில் பலர் 90 சதவீத தீக்காயங்களுடன் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், வருவாயத்துறை அதிகாரிகள், மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
கேரள டி.ஜி.பி டாக்டர் ஷைக் தர்வேஷ் சாஹேப் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் டிஜிபி கூறியதாவது:
முதல்கட்ட விசாரணையில் IED (improvised Explosive Device-கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். வெறுப்பைத் தூண்டும் வண்ணம் யாரும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம். அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த குண்டு வெடிப்பில் உள்ள சதிகள் பற்றி என்ஐஏ விசாரணை நடத்தும் என்றும் கூறினார். எனவே கொச்சி என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே மாநில போலீசார் கேரளா முழுவதும் உஷார் படுத்தினர். தமிழ்நாட்டிலும் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
2019ல் ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையில் தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்ததும், இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது. எனவே அதுபோன்ற ஒரு தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ, மற்றும் கேரள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்தில் களமச்சேரி குண்டு வெடிப்பிற்கு தான் தான் காரணம் என்று கேரள மாநிலம் கொடக்கரை காவல் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கிறிஸ்தவ ஜெபக்கூட்ட குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள மார்ட்டின், அதற்கு முன்னதாக தான் குண்டுவைத்தது ஏன் என்பது குறித்து விளக்கி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“என்னோட பெயர் மார்டின்.
இப்போது நடந்த சம்பவம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியவந்திருக்கும் என நம்புகிறேன். யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses) அமைப்பினர் நடத்திய ஒரு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்று பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.
என்னவிதமான சேதம் ஏற்பட்டது என்பது எனக்கு முழுமையாக தெரியாவிட்டாலும், சம்பவம் நடைபெற்று பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
அந்த சம்பவத்தின் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அங்கே அந்த குண்டு வெடிப்பை நடத்தியது நான் தான். எதற்காக நான் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தினேன் என்பதை உங்களுக்கு விளக்க தான் நான் இந்த விடியோவை வெளியிடுகிறேன்.
16 வருடங்களாக நானும் இந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த அமைப்பு குறித்து நான் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாக தான் எடுத்துக்கொண்டேன்.
ஒருவருக்கு ஒரு நம்பிக்கை இருப்பது தவறல்ல. நாம் பூமியில் பிறக்கின்றோம், வாழ்கின்றோம், இறந்து போகின்றோம் சிலர் சொர்க்கத்துக்கு செல்வதாகவும், சிலர் நரகத்துக்கு போவதாகவும் நம்புகின்றனர். அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. அது தவறல்ல.
ஆனால் இந்த அமைப்பினர், பூமியில் வாழ்கின்ற அனைவரும் அழிந்து போவார்கள் ஆனால் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் அழிந்து போக மாட்டார்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்று போதிக்கின்றனர்.
850 கோடி மக்களின் அழிவை விரும்புகின்ற ஒரு அமைப்பை நாம் என்ன செய்ய வேண்டும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த தவறான அமைப்பையும் அவர்களது போதனைகளுக்கு எதிராக எதாவது செய்தே ஆக வேண்டும்.
இது போன்ற போதனைகள். பிரசாரங்கள் இந்த நாட்டில் தேவையில்லாதது என்ற முழு நம்பிக்கையோடுதான் நான் இதை கூறுகிறேன்.
அடுத்ததாக நான் இப்போதே போலீஸ் ஸ்டேசனிற்கு சென்று சரணடைய போகிறேன். என்னை தேட வேண்டிய அவசியமில்லை.” என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஆனாலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த குண்டு தயாரிப்பில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, எப்படி குண்டு தயாரித்தார். இதற்கு முன் குண்டுகள் தயாரித்து எங்காவது வைத்து பரிசோதனை செய்தாரா, இவருக்கு வேறு யாரும் உதவி செய்தார்களா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.
அதே நேரத்தில் அவர் யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் கூறி வருகிறார்.