Skip to content
Home » தேர்தல் என்பதால் கேஜ்ரிவாலை கைது செய்யக்கூடாதா? .. E.D கேள்வி..

தேர்தல் என்பதால் கேஜ்ரிவாலை கைது செய்யக்கூடாதா? .. E.D கேள்வி..

  • by Authour

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவரிடம் வீட்டில் சென்று வாக்குமூலம் பெற எந்தவித அமலாக்கத் துறை முயற்சியும் எடுக்கவில்லை. வாக்குமூலம் பெற்ற பிறகே அவரை கைது செய்திருக்க வேண்டும். கேஜ்ரிவால் நாட்டைவிட்டு வெளியேற சாத்தியம் உள்ளதா? கடந்த ஒன்றரை ஆண்டில் கேஜ்ரிவால் சாட்சிகள் யாரையாவது மிரட்டி உள்ளாரா அல்லது விசாரணைக்குதான் மறுத்தாரா? அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கைது செய்துள்ளனர்.

டில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்குச் சவாலாக உள்ளது. இங்கு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவும் அவரை கைது செய்துள்ளனர். இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிக்கிறார்கள்.

தற்போது கேஜ்ரிவாலை அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? முதல்கட்டத் தேர்தல் நடக்கும் முன்பாக ஆம் ஆத்மி கட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த அவசர கைது நடந்துள்ளது. தேர்தலுக்கு முன், பதவியில் இருக்கும் முதல்வரை கைது செய்தது தேவையற்றது” என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வாதிட்ட அமலாக்கத் துறை வழக்கறிஞர், “தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டை கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு. போதுமான ஆதாரங்கள் இருந்ததால் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்தால், அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? இந்த வழக்கின் முறைகேட்டில் கேஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், விசாரணையை நா்ளைக்கு  ஒத்திவைத்தது.

இதனிடையே, “கேஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. தனக்கு கடுமையான உடல்நல பிரச்சினைகள் இருந்தபோதிலும் தேசத்துக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் உழைக்கிறார். கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை அரவிந்த் கேஜ்ரிவால் நான்கரை கிலோ எடை குறைந்துள்ளார். இது மிகவும் கவலை அளிக்கிறது. பாஜக அவரது உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. கேஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால், நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்” என்று டில்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.  அதிஷியின் இந்த குற்றச்சாட்டை திகார் சிறை வட்டாரங்கள் மறுத்துள்ளன. இது தொடர்பாக பேசிய திகார் சிறை அதிகாரிகள், “கேஜ்ரிவால் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது இருந்த அவரது உடல் எடையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை. அவரது ரத்த சர்க்கரை அளவும் தற்போது சாதாரணமாகவே உள்ளது தற்போது வரை அவர் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *