டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் இருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதனை எதிர்த்து அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சி.பி.ஐ., வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது: மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் தன்னை சி.பி.ஐ., தொடர்ந்து துன்புறுத்துகிறது. இது கவலைக்குரிய விஷயம். சி.பி.ஐ., விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ., நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
