கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார்
இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கைதானார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தி வந்தது. தொடர்ச்சியாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக கடந்த 13-ம் தேதி கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது’ என உச்ச நீதிமன்றம் செக் வைத்திருக்கிறது.
இந்த சூழலில்தான் கெஜ்ரிவால், “எனது பதவியை இன்னும் இரண்டு நாள்களில் ராஜினாமா செய்யவுள்ளேன்” என அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை அந்த நாற்காலியில் அமரமாட்டேன். சட்ட நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது, இனி மக்கள் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும். மக்கள் ஆணை பிறகே முதல்வர் நாற்காலியில் அமருவேன். நான் மக்களிடம் செல்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்று மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன். மேலும் துணை முதல்வரான மனிஷ் சிசோடியாவும் அவருடைய பதவியைத் தொடரமாட்டார். மக்கள் எங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் போதுதான் அவரும் துணை முதல்வர் பொறுப்பை ஏற்பார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலை இந்த ஆண்டு நவம்பரிலேயே நடத்த வேண்டும்.
டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை மற்றொரு தலைவர் முதல்வர் பொறுப்பு வகிப்பார். அவர் யார் என இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும். நான் இல்லாத நேரத்தில் அதிஷி என்னுடைய இடத்தில் இருந்து கொடியேற்ற வேண்டும் என்று நான் துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு, ‘இனி ஒருமுறை நீ எனக்கு கடிதம் எழுதினால் உன்னுடைய குடும்பத்தை உன்னால் பார்க்கவே முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து என்னைப் பயமுறுத்தலாம் என்பதே என் கைதுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம். நான் சிறையில் இருந்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த நாட்டின் ஜனநாயத்தின் பலம் தேவைப்பட்டது. சிறையில் இருந்தும் ஆட்சி நடத்த முடியும் என்பதை நான் நிரூபித்துவிட்டேன்.” என்றார். இந்தநிலையில் இன்று கெஜ்ரிவால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.