டில்லி மதுபான கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கேஜ்ரிவாலுக்கு ‘டைப்-2’ நீரிழிவு நோய் உள்ளது. அவர் இன்சுலின் கேட்டு தனது குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்ப்ரன்சிங் முறையில் கலந்தாலோசிக்க கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஆனால், கேஜ்ரிவாலின் கோரிக்கையை சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது. இந்நிலையில், கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க மறுப்பது, அவர் மருத்துவரை கலந்தாலோசிக்க விடாமல் செய்வது ஆகியவற்றின் மூலம் அவரை மெதுவாக கொல்லும் முயற்சி நடந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், பகீர் குற்றம்சாட்டை தெரிவித்துள்ளார்.
திகார் சிறை நிர்வாகம், மத்திய பாஜக அரசு மற்றும் டில்லி துணை நிலை ஆளுநர் ஆகியோர் சதியால் கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க மறுக்கப்படுகிறது. அதிக சர்க்கரை உள்ள நோயாளி மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அவரது உடல் உறுப்புகள் சேதமடையலாம்.
அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இது நடக்கலாம். இது நடந்தால், எந்த துணை நிலை ஆளுநரும் அவருக்கு சிறுநீரகம் அல்லது கல்லீரலை வழங்க முடியாது.” என்றார். இதற்கிடையே தினமும் 15 நிமிடங்கள் டாக்டரை அணுக அனுமதி கோரும் கேஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை பிறப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.