Skip to content

கீழணையில் இருந்து வீராணம்ஏரி பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு வடவாறு தலைப்பு மதகு மூலம் தண்ணீரை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்த வைத்தார். இந்த தண்ணீர் மூலம் கடலூா் மாவட்டத்தில் 92,854 ஏக்கரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,294 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

காவிரி டெல்டா பாசனத்திற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கடந்த 28.07.2024 அன்று மேட்டூரிலிருந்தும், 31.07.2024 அன்று கல்லணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 13.09.2024 கீழணையிலிருந்து வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.

இன்று திறக்கப்படும் தண்ணீர் கீழணையின் வடக்கு பிரிவு வாய்க்கால்கள் மூலம் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 92,853 ஏக்கரும், தெற்கு பிரிவு வாய்க்கால்கள் மூலம் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 39,050 ஏக்கர் என மொத்தம் 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் கீழணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரி மற்றும் சேத்தியாதோப்பு அணைக்கட்டுகளில் தேக்கப்பட்டு, சுமார் 120 கிராமங்களின் நிலத்தடி நீர் உயரவும், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 72 கனஅடி/விநாடி குடிநீருக்காகவும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மட்டும் உள்ள காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி வட்டங்களில் மொத்தம் 1,33,522 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 18 கிராமங்களில் உள்ள சுமார் 3670 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
கீழணை தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!