கயல் தினகரன் இயற்கையின் மடியில் துயில் கொள்ளச் சென்றிருப்பது கழகத்துக்குப் பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்… கொள்கை விளக்காக ஒளிவீசிய நமது கழக இலக்கிய அணியின் மாநில இணைச் செயலாளர் திரு. கயல் தினகரன் அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி வந்தடைந்தது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.
பகுத்தறிவு கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு திராவிடக் கருத்தியலை உள்வாங்கி கழகமே தன் மூச்சென செயல்பட்ட முன்னோடிதான் நமது கயல் தினகரன் அவர்கள். இதழியல் துறையில் மின்னிய அவரது எழுத்தாற்றல் சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு அவர்களால் பட்டை தீட்டப்பட்டது.
அவரது ‘தென்னகத் தலைவன்’ ஏட்டினை பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையான முரசொலியில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் பெற்றார். 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலைஞர் விருதினை தலைவர் கலைஞர் அவர்களது கரங்களால் பெற்ற பெருமைக்குரியவர். ஆண்டுகளுக்கும் மேலாகக் கருப்பு சிவப்பே தனது வாழ்வென இருந்த கயல் தினகரன் இயற்கையின் மடியில் துயில் கொள்ளச் சென்றிருப்பது கழகத்துக்குப் பேரிழப்பாகும்.
திரு. கயல் தினகரன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழகத் தோழர்கள் அனைவர்க்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.