டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மேலவை உறுப்பினரான கே. கவிதா மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நாளை (11-ம் தேதி) டில்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், டில்லி ஜந்தர்மந்தரில் கே.கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று கே.கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பாரதிய ராஷ்டிரிய சமிதி கே.கவிதா நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கரஸ், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.