தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம் வருபவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர், ‘லிப்ட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடரிலும், நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
‘டாடா’ படத்தின் வெற்றி கவினை தற்போது அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில் கவின் அடுத்து நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகிறது. இதையடுத்து ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அவர் ‘டாக்டர்’, ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.