பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், காவலூர் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் என்.செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராபியா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பொங்கல்விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், ஊராட்சி பணியாளர்கள் புதுப்பானை வைத்து பச்சரிசி பொங்கலிட்டு சாமிக்கு படைத்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிராம வருவாய் அலுவலர் தேவி, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், ஊராட்சி செயலர் அபிஷா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் கரும்பு வழங்கினார்.