முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைமலைநகர் செல்லும் வழியில் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு மனு கொடுக்க வந்திருந்த பெண்ணிடம் எதற்காக நிற்கிறீர்கள். என்ன பிரச்சனை? மனு கொடுக்க வந்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த பெண் விரிவாக பதில் கூறினார்.
அதன்பிறகு ஊழியர்கள் பணியாற்றும் பொதுப்பிரிவு அறைகளுக்கு சென்று பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார். அங்கு பணியாற்றும் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் பணியின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கூறுகையில், மக்கள் தரும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அங்கிருந்து நோட்டு ஆவணங்களை பார்வையிட்டு ஊழியர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் புறப்படும்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சரிடம் விருப்பம் தெரிவித்தனர். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.