சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலையும் வழக்கம்போல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிடம் இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஜே.சி.பி. எந்திரம் கட்டிடத்தின் உள்பக்கம் இருந்து இடிக்கும் பணியை மேற்கொண்ட போது, கட்டிடத்தின் சுற்றுச்சுவர் சாலையோர நடைபாதையில் திடீரென இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். இதில் மேலும் ஒருவர் காயமடைந்தவரையும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்டனர். வாலிபர் காலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பத்மபிரியா (22) என்பதும், வாலிபர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் (22) என்பதும் தெரியவந்தது. இவரும் பத்மபிரியா பணியாற்றிய சாப்ட்வேர் கம்பெனியிலேயே வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 2 பேர் கைது பத்மபிரியாவின் உயிரிழப்புக்கு, கட்டிடத்தை இடிப்பதற்கு முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் ஜே.சி.பி. மிஷின் உரிமையாளர் ஞானசேகர் (35), டிரைவர் பாலாஜி (25) ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோர்ட் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கட்டிட உரிமையாளர், என்ஜினீயர், ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவின் கீழ் (சாவுக்கு காரணமாக இருத்தல்) போலீசார் வழக்குப்பதிவு வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தவறுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு சேர்ந்து பல்வேறு கனவுகளுடன் தனது அடுத்த கட்ட வாழ்க்கையை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்த பத்மபிரியா வேலைக்கு சேர்ந்த ஒரு மாத காலத்திலேயே கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர் வேலைபார்த்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.