ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 2ம் கட்ட தேர்தலில் 27 லட்சத்து 78 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதேவேளை, வாக்களிக்க 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணிவரையில் கிடைத்த தகவல்படி வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்குமாறும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.