கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் அருகம்பாளையம் நீரேற்று பாசன சங்கம் மூலம் அமைந்துள்ள கிணறு உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் மூலம் கிணற்றிலிருந்து குழாய்கள் மூலமாக விவசாய தேவைக்கு நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் விவசாய தேவைக்கு நீரை பயன்படுத்தாமல் அமராவதி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீரானது அந்த கிணற்றிலிருந்து அருகில் உள்ள சாய ஆலைகளுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்ற
விவசாயி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிணற்றிலிருந்து விவசாய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சாய ஆலை உரிமையாளரை அழைத்து சட்டவிரோதமாக நீரை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் கிணற்று நீரை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.