கரூர் மாவட்டம், சோமூர் வழியாக அமராவதி ஆறு சென்று திருமுக்கூடலூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சோமூரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் புலியூரில் செயல்பட்டு வரும் தனியார் ஆலைக்கு சொந்தமான நீரேற்று நிலையம் அமைந்துள்ளது.
அந்த நீரேற்று நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி என்ற பணியாளர் நேற்று இரவு 8.30 மணி அளவில் வேலை நிமித்தமாக சென்றுள்ளார். அமராவதி அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு அமராவதி ஆற்றில் அதிகப்படியான நீர் வெளியேற ஆரம்பித்தது. திறந்து விடப்பட்ட உபரி நீரானது ஆற்றின் இரு கறைகளையும் தொட்டு, ஆர்ப்பரித்து சென்றதால் நீரேற்று நிலையத்தையும் வெள்ள நீரானது சூழ்ந்தது.
அப்போது நீரேற்று நிலைய பணியாளர் பழனிச்சாமி உள்ளே சிக்கிக்கொண்டார். அவர் நீரேற்று நிலையத்திற்குள் சிக்கிக் கொண்டு, வெள்ளத்தில் வெளியே வர முடியாமல் தவித்தது குறித்து, கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பெயரில், கரூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வெள்ள நீரில் நீந்திச்சென்று கயிறுகள் மற்றும் காற்று நிரப்பிய ட்யூப் உதவியுடன் பழனிச்சாமியை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.