கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. முன்னதாக கல்யாண
பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரனாகி, கணபதி, பாலமுருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
பின்னர் தேரை கூடியிருந்த பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி உள்ள நான்கு மட வீதிகளிலும் சுற்றி வலம் வந்தது.அப்போது ஒவ்வொரு வீதிகளிலும் கூடி நின்ற பக்தர்கள் தேரின் முன்பு நின்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மேலும், பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.