கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் செய்தார். இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார்.
சார்பதிவாளர் அளித்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரகாஷ் வாங்கல் பகுதியில் வசிப்பதால், இவர் கொடுத்த புகார் மட்டும் வாங்கல் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர், கடந்த 12ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடந்த 25ம் தேதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சையின்போது அவருடன் இருக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமீன் கோரி கடந்த 1ம் தேதி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் நீதிபதி சண்முகசுந்தர் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அதில், ‘இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அரசியல் முன்விரோதம் மற்றும் காழ்ப்புணர்வு காரணமாக தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. வயதான காலத்தில் மருத்துவமனையில் இருக்கும் எங்களது தந்தையுடன் உடனிருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், எங்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே இன்று விஜயபாஸ்கரும், உறவினர் பிரவீன் என்பவரும் கேளாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கரூர் கொண்டு வருகிறார்கள்.