100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். போலீசாருக்கு பயந்து விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ஆகியோர் ஒரு மாதகாலமாக தலைமறைவாக உள்ளனர். அவர்கள் ஒரு இடத்தில் தங்காமல் கார்களில் சுற்றி சுற்றி வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் மோசடி வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக சிபிசிஐடி போலீசார் கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் இன்று காலை கரூர் – கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனையை தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்கிற பயம் விஜயபாஸ்கர் தரப்பில் ஏற்பட்டுள்ளது.