Skip to content
Home » அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 5 வருடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தனி அலுவலரிடம் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, 6-ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அன்று சமர்ப்பிக்காமல் 7-ஆம் தேதி மாலை தீர்மான பதிவேடு அதிகாரிகள் மூலம் தனி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியிணை கரூர் மாநகராட்சிக்கு மாற்றம் செய்திட எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி முழுவதும் சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளின் அடிப்படையில், ஊராட்சியின் தீர்மான புத்தகம் மற்றும் கூட்டப் பொருள்களை ஆய்வு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

ஊராட்சியின் தீர்மான புத்தகத்தை ஆய்வு செய்ததில், 2021ஆம் ஆண்டு ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியிணை கரூர் மாநகராட்சியுடன் இணைத்திட ஆட்சேபனை ஏதும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மூன்று வருடங்கள் கழித்து கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்ததன் அடிப்படையில், மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பதிவேட்டில் உள்ளது.

ஆனால், சஞ்சய் நகரில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளுக்கு சாலை பாதுகாப்பு அடையாளங்கள் அமைக்க பொது நிதி மூலம் பணி மேற்கொள்ளும்
மன்ற தீர்மானத்திற்கு பதிலாக, மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற அடிப்படையில் வேறொரு தீர்மானம் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயலர் மற்றும் தற்காலிக கணினி உதவியாளரை விசாரணை மேற்கொண்ட போது, ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவின் பேரில் தீர்மானத்தை மாற்றி ஒட்டப்பட்டுள்ளதாக நேரில் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாநகராட்சியுடன் இணைக்க ஆட்சேபனை என்ற தீர்மானம் மன்றத்தால் நிறைவேற்றப்படவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே, ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட உண்மையான தீர்மானத்திற்கு பதிலாக, தீர்மான புத்தகத்தை திருத்தம் மேற்கொண்டு வேண்டுமென்றே காலதாமதமாக ஒப்படைத்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மீது, சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிவுள்ளதாக தெரிவித்தார்.

வேண்டுமென்றே அவதூறான கருத்துக்களை பேசி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சேகர் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில், தீர்மான புத்தகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடு செய்திருப்பதாக இன்று இரண்டாவது முறையாக வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.