கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவோடு, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி ஆகிய கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலை கிராமத்தின் ஒரு பகுதி அப்படியே மண்ணில் புதையுண்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கினர்.
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு வயநாடு மாவட்டம் முழுவதும் உள்ள 92 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக இன்று தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர், தன்னார்வளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த 387 பேரில் இதுவரை 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் அடையாளம் தெரியாத 8 பேரின் உடல்கள் நேற்று ( ஆக.4) ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மீதம் இருப்பவர்களில் அடையாளம் காண முடியாதவர்களின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 180 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.