கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலத்தின் கீழ் இரண்டு கிளைகள் இயங்கி வருகிறது.
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரூர் மண்டலத்தில் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பணியின் போது தனியார் மினி பேருந்து மீது மோதியதில் ஏற்பட்ட சேதத்தில் நிர்வாகத்துக்கு தெரியாமல் அரசு பேருந்து கண்ணாடியை தாமாகவே மாற்றிவிட்டு, டிப்போவில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகவும், கூடுதல் பணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஓட்டுநர் தர்மராஜ்-இடம் டிப்போ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதவி பொறியாளர் கார்த்திக் ஓட்டுநரை
தாக்கியதாகவும், மயக்கமடைந்த ஓட்டுநர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டிப்போ அதிகாரிகள் தொடர்ந்து இதேபோல், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஓட்டுனர் தர்மராஜ் கடந்த பத்து ஆண்டுகளாக பலமுறை அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகவும், பொருள் சேதங்கள் ஏற்படுத்தியதாகவும், அவர் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஊதிய உயர்வு ஓராண்டுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நேற்று நடந்த சம்பவத்தின் போது டிப்போ உதவி பொறியாளர் கார்த்திக் என்பவரை ஓட்டுநர் தர்மராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அதிகாரியை தரக்குறைவாக பேசியதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் கொடுத்தார்.