கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி செயல் பட்டு வந்தார். அவரின் கணவர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய நிதிகளில் பெரும் ஊழல் செய்ததாகவும் கடந்த மார்ச் எட்டாம் தேதி ஒன்றிய கவுன்சிலர்கள் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து லதா ரங்கசாமி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து காலியாக இருந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று கரூர் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குனர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் தேர்தலுக்கு இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதால் அவர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரான இந்திராணி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சுகந்தி சசிகுமார் ஒன்றிய குழு தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமர், தோகைமலை ஒன்றிய கவுன்சிலர்கள் திமுக ஒன்றிய நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.